Tuesday 17 September 2013



குழந்தைகளின் பால்யத்தைப் 

பாலைவனமாக்கி விடாதீர்கள்

(பகுத்தறிவுச் சிந்தனை இதழில் வெளிவந்த எனது பேட்டி)  

‘புதிய தலைமுறைவார இதழின் இணையாசிரியர் பெ. கருணாகரன் குழந்தைகளுக்காக எழுதிய சிறுகதைத் தொகுதி ‘அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?’. வழக்கமான குழந்தைகள் கதைகளிலிருந்து மாறுபட்டு, சுற்றுச் சூழல், பிராணிகளிடம் பரிவு, மரம் வளர்ப்பதன் முக்கியம் என்று புதிய கோணத்திலும், தளத்திலும் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு கதைகளுக்கான படங்களை பள்ளிக் குழந்தைகளைக் கொண்டே வரைய வைத்திருப்பதுதான். அட்டைப் படத்தை வரைந்திருப்பவன் யுகேஜி படிக்கும் சிறுவன். இந்தப் புத்தகம் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, உள்ளிட்ட அமைப்புகளின் விருதுகளை வென்றுள்ளது. சமீபத்தில் இந்த நூலுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம்  அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வழங்கியுள்ளது. கருணாகரனிடம் பேட்டி காண விரும்பினோம். அவரது முகநூல் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் இங்கே பதில் கூறியுள்ளார்.
(புத்தகம் கிடைக்குமிடம் : அகநாழிகை புத்தக உலகம். தொடர்புக்கு :
999 454 1010, aganzhigai@gmail.com )

திருநாவுக்கரசு திருநீலகண்டன் : உங்களின் குழந்தைப் பருவம் பற்றி கூறுங்கள் 

சகோதரிகள் நிறைந்த குடும்பத்தில் நான் மட்டுமே ஆண் வாரிசு. அதனால், எனக்கு கொஞ்சம் கூடுதல் சலுகைகள் உண்டு. சகோதரிகளுக்குக் கிடைக்காத தின்பண்டங்கள் எனக்கு ரகசியமாக வழங்கப்படும். அப்போது நான் அதனை ஏற்றேன். எனக்கு ரகசியமாய்க் கொடுக்கப்படுவதை யாருக்கும் தெரியாமல் தின்றேன். ஆனால், இப்போது அதனை நினைக்கும்போது, கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவும்  அவமானமாகவும் உணர்கிறேன். என்றாலும் மனமுதிர்ச்சியற்ற அந்தக் குழந்தையின் செயல்பாட்டில் உள்ள நியாயத்தையும் ஒருபுறம் ஏற்கிறேன். மற்றபடி படிப்பில் ரொம்ப சுமாரானவன். பத்தாம் வகுப்பில் தோல்வி. என்றாலும் என் வீட்டில் என்னைப் படி, படி என்று யாரும் தொந்தரவு தரவில்லை. அதுவே எனக்குப் பிடித்தமான எழுத்துத் துறையைத் தடையின்றித் தேர்தெடுக்க்க் காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். என் குழந்தைகளிடமும் அதிகம் எதையும் வற்புறுத்துவதில்லை. குழந்தைகளிடம் எதையும் வற்புறுத்தக் கூடாது என்பதை என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்திலிருந்து கற்றுக் கொண்டதாகவே நினைக்கிறேன்.

உங்கள் பள்ளி காலத்தில் நீங்கள் விரும்பி படித்த குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் எவர், பத்திரிகைகள் எவை ?

முதலில் பத்திரிகைகள் : கண்ணாடி, அணில், முயல், கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, பொம்மை வீடு, அம்புலி மாமா என்று நீளும் பத்திரிகைப் பட்டியலில் என் மனம் கவர்ந்த பத்திரிகை பூந்தளிர். அதுபோல் ஒரு குழந்தைகள் இதழ் இன்று வந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தோன்றுகிறது. அதில் இடம் பெற்ற படக்கதைகள் பல ‘டிங்கிள் என்ற ஆங்கில இதழில் இருந்து கையாளப்பட்டவை. அப்புறம் காமிக்ஸ் என்றால் முத்து காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ். இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ், டேவிட், ஜானி, ஸ்டெல்லா ஆகிய பாத்திரங்கள் என் பால்யத்தோடு பதிந்து ஒன்றிப் போன கதாபாத்திரங்கள். அப்போது படித்த எழுத்தாளர்கள் என்றால் அழ.வள்ளியப்பா, வாண்டு மாமா. இப்போது, குழந்தைகள் இலக்கியத்தில் நிறைய பங்களித்துக் கொண்டிருப்பவர்  இரா. நடராசன். அருமையான எழுத்துக்கள் அவருடையவை. இப்போது குழந்தைகளுக்கான பத்திரிகைகள் குறைந்து மறைந்து விட்டன. மிகக் குறைந்த விலைக்கு வெளியிடப்பட்ட ராணி காமிக்ஸ் கூட நின்று விட்டது.

இன்றைய குழந்தைகள் குறிப்பாக நகரத்தில் இருக்கும் குழந்தைகள் செல் போன் போன்ற மின்தொடர்புச் சாதனங்களைக் கூட எளிதாக உபயோகிக்கத் தெரிந்திருக்கிறார்கள். இந்த அறிவு முதிர்ச்சி  அவர்களுக்கான கதை எழுதுபவர்களுக்கு எப்படிப்பட்ட சவாலாக இருக்கிறது?

 ஓர் எழுத்தாளன் தகவல் சேகரிப்பதில் தன்னை அப் டு டேட் ஆக வைத்துக் கொண்டிருந்தால் அதில் சவால் ஏதும் இருக்கப் போவதில்லை. அதனை சரியான இடத்தில் சரியான வார்த்தைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் இன்றைய விஞ்ஞானச் சாதனங்களையும் கதைகளில் மிக எளிதாக, கொஞ்சம் ஃபேண்டஸி டைப்பில் புகுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு முதலை ஒரு மான்குட்டியைக் கவ்விக் கொண்டு  கடலுக்குள் போய் விடுகிறது. மான் தன் குட்டியைக் காப்பாற்ற வழியறியாது தவிக்கிறது. அப்போது அதற்கு நீர்மூழ்கிக் கப்பல் நினைவுக்கு வர, நீர்மூழ்கிக் கப்பலில் சென்று தன்குட்டியை மீட்டு வருகிறது. இந்தப் புனைவு வெறும் கப்ஸா போலிருக்கலாம். தர்க்கங்களைத் தாண்டியது குழந்தைகளுக்கான கதைத் தொழில்நுட்பம்.   

குழந்தையைப் பொறுத்த வரை மனிதர்களும் மரப்பாச்சி பொம்மைகளும் ஒன்றுதான். இன்னும் சொல்லப் போனால் தன் பெற்றோரிடம் பேசத் தயங்கும் குழந்தை கூட தான் விளையாடும் பொம்மையிடம் அதிகம் பேசும். அதற்கான உளவியல் காரணங்கள் பல.
இன்றைய நிலையில் குழந்தைகள் ஒன்றைப் புரிந்து கொள்வதில் படுவேகம். அதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லாம். நான் கம்ப்பூட்டரை என் 23வது வயதில்தான் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மகனுக்கோ பிறக்கும்போதே அது சாத்தியமானது. எனவே அவற்றுடனான பழக்கம் இளவயதிலேயே கை வந்து விடுகிறது. உலக மயமாக்கல்  நகரம், கிராமம், ஏழை, பணக்காரர், முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என்பவற்றையெல்லாம் இன்று உடைத்தெறிந்து விட்டது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த என் மகனை விட முதல் தலைமுறையைச் சேர்ந்த என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிறுவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறான்.

ஆர்வம் உள்ள யாரும் தனக்குரியதைக் கண்டெடுத்தே தீருகிறார். இசையுலகில் இளையராஜா என்ற ஏழைச் சிறுவன் தன் சிறுவயதிலேயே தனக்கான புல்லாங்குழலைத் தானே உருவாக்கிக் கொண்டார். ஒரு கனவும் அதில் வலிவும் அதை அடைந்து விடவேண்டும் என்கிற அடங்கா வேட்கையும் அதற்கான உழைப்பையும் ஒருவன் தரத்தயாராய் இருக்கும்போது, எந்தச் சூழலும் அதனைத் தடுத்து விடமுடியாது. எனவே எதிர்காலம் பிரகாசமாயும் நம்பிக்கைக்குரியதாயுமே இருக்கிறது. பெரியவர்களாகிய நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. அது, அந்தக் குழந்தைகள் வாழ்வதற்குத் தகுதியுள்ளதாக இந்த உலகத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அவர்களின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதே.

இன்றைய குழந்தைகளுக்கு படிப்பதற்கும், பாட்டு, நடனம், கராத்தே பிற கவர்ச்சியான, படிப்பல்லாத செயல்களுக்கும் நேரம் போதுவதில்லை. பாடமல்லாத  வாசித்தல்,  எழுதுதல், பேசுதல்  போன்றவைகளுக்கு  எவ்வளவு நேரம் ஒதுக்குதல் அவசியம் என நினைக்கிறீர்கள்?

குழந்தைக்கு எது ஆர்வமோ அதில் ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கான நேரத்தை அவர்களே ஒதுக்கிக் கொள்ளச் சுதந்திரம் கொடுங்கள். அவர்களுக்குத் திசை காட்டிவிட்டு, அவர்கள் நடந்து செல்வதை ஒரு பார்வையாளனாய் வேடிக்கைப் பாருங்கள். தடுக்கிவிழும் சூழல்களில் மட்டும் தலையிட்டுத் தட்டிக் கொடுத்துத் தூக்கிவிடுங்கள். மாறாக குழந்தையின் கைகளைப் பற்றி, நடத்திச் சென்று தனக்கு நடக்கத் தெரியும் என்கிற உண்மை புரியாதவர்களாய் தன்னம்பிக்கையற்றவர்களாய் அவர்களை மாற்றிவிடாதீர்கள்.  சுருக்கமாய்ச் சொன்னால் ஃபிரீயா வுடு மச்சி...

கருங்குளம் மா. முருகன்  : எதிர்கால இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்கவிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களை முழுமைப்படுத்த வழங்கப்பட வேண்டியவை எவை, எவை என்பவற்றை விளக்குங்களேன்

‘உலகத்தை மாற்ற கல்வியே வலுவான ஆயுதம்என்றார் நெல்சன் மண்டேலா. அந்தக் கல்வி, குழந்தைகளுக்கு கேள்வி ஞானத்தையும் கற்பனை வளத்தையும் வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். ஆனால், ஆமை ஓட்டுக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதைப்போல் புறவுலக அனுபவங்களைத் துண்டிக்கும் கத்திரியாகவே இன்றைய கல்வி உள்ளது. பாடங்கள் குழந்தைகளின் நேசிப்புக்குரியதாக அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அவற்றை சுவாரஸ்யப்படுத்தப்படுவதுடன் கற்பித்தலிலும் செய்முறை அணுகுமுறை வேண்டும். ஆனால், இன்று பள்ளிகள் கான்கிரீட் சிறைககளாகக் குழந்தைகளைப் பயமுறுத்துகின்றன. பள்ளிக்குச் சென்றவுடன் எப்போது குளோசிங் பெல் அடிக்கும் என்று குழந்தைகள் ஏங்கும் வகையிலேயே நிலைமை உள்ளது. பல ஆசிரியர்கள் சுவாரஸ்யம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களாகவே இருக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு வளைப்பதற்குப் பதிலாக முறித்துவிடும் முரட்டுத்தன முயற்சிகளே அதிகமிருக்கிறது. முதுகு முறிவதற்குக் குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டையே போதுமானது. தங்கள் பாடத்தின் மீது விருப்பம் வந்துவிட்டால் குழந்தைகளை நாம் படிக்கச் சொல்லி வற்புறுத்தவே வேண்டாம். தானாகப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். ‘காலை எழுந்தவுடன் படிப்பு. பின்னர், ரிலாக்ஸ் செய்து கொள்ள பாட்டு. மாலை முழுதும் விளையாட்டுஎன்ற நிலை வந்தால், புத்தகங்களுக்குள் புதைந்து புழுங்கிச் சாகும் நிலைமை மாறும். கி.ராஜநாராயணன் ஒரு கட்டுரையில் கூறுவார் மழைக்காகத்தான் நான் பள்ளிக்கு ஒதுங்கினேன். அப்போது கூட நான் பாடத்தைக் கவனிக்கவில்லை. மழையைத்தான் வேடிக்கைப் பார்த்தேன்’  இந்த நிலைமை மாற பாடங்களை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்ற வேண்டியது அவசியம்.

முத்துராமலிங்கம் சுப்பிரமணியன்  : ஒரு குழந்தைக்குப் படம் பிடித்தால், கண்டிப்பாகப் பெற்றோருடன் அல்லது குடும்பத்துடன் தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டிவரும்.  இருந்தும் இன்றைய சூழ்நிலையில் நல்ல கருத்துகளை கூறும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ஏன் வருவதில்லை?

குழந்தைகள் படத்துக்குப் பெரிய வர்த்தக வாய்ப்பு இல்லை என்றே தமிழ்த் திரையுலகம் நினைக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இதுவரை வெளிவந்திருக்கும் தமிழ்ப் படங்களில் குழந்தைகளுக்காக வெளிவந்திருக்கும் படங்கள் நூறைத் தாண்டுமா என்பதே சந்தேகம்தான். அப்படி எடுக்கப்பட்ட, குழந்தைகள் படம் என்று அடையாளம் காட்டப்பட்ட படங்கள் கூட, சரியான குவியத்துடன் குழந்தைகளை அணுகியிருப்பதாகச் சொல்ல முடியவில்லை.

குழந்தைகள் சேட்டை செய்தால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் நடித்தால் அது குழந்தைகளுக்கான படம் என்கிற ஒரு நம்பிக்கை சினிமாக்காரர்களிடம் இருக்கிறது. . குழந்தைகளை இயல்புக்கு மாறாய், வயதுக்கு மீறிப் பேச விடுவதும் குழந்தைகள் படத்தின் தமிழ் அணுகுமுறைகளில் ஒன்றாக உள்ளது.  விலங்குகள் நடிக்கும் தேவர் பிலிம்ஸ் படங்களும் கூட குழந்தைகளுக்கான படம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டன. அதே படத்தில்தான் ஹீரோவும் ஹீரோயினும் கட்டிப்பிடித்து ஜலக்கிரீடை செய்வார்கள்.  
1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான  மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தை ஒரு முழுமையான குழந்தைகள் படம் என்று சொல்லலாம். அடுத்து, அமீர்கான் நடித்து ஹிந்தியில் வெளியான ‘தாரே ஜமீன் பர்’  படம் அற்புதமான குழந்தைகள் படம்.  மன எழுச்சியைத் தந்த படம். கற்றல் குறைபாடு ஒரு குறையல்ல. அதனை எதிர் கொண்டு வெல்லலாம் என்ற நம்பிக்கையை பாமரர்களுக்கு அளித்த படம்.  கற்றல் குறைபாடுள்ள குழந்தையிடம் அன்பு பாராட்டி எப்படி அணுக வேண்டும் என்பதை செயல்முறையில் விளக்கிய படம். தமிழில் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வூட்டும் நோக்கில் ஹரிதாஸ் என்னும் படம் வந்தது. ஆனால், அது முழுமையாக மனதைத் தொடவில்லை. 
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன என்று. தமிழில் அப்படி யாரும் குழந்தைகளைக் குறி வைத்துப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. சாப்பாட்டில் ஊறுகாயைப் போல் குழந்தைகள் ரசிப்பதற்காக சில காட்சிகளைச் சிலர் சேர்க்கிறார்கள்.  இன்றைய உலக மயமாக்கலில் குழந்தைகளை வாங்கும்/ வாங்க வைக்கும் இயந்திரங்களாக்கும் முயற்சியில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பதை விட, அவர்களைக் கவரும் வகையில் விளம்பரப்படங்கள்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன.

  பொதுவாகச் சொன்னால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிப்பதற்கான சில காட்சிகள் உண்டே தவிர, முற்றுமாக குழந்தைப்படம் என்று ஏதும் இல்லை.

தேனம்மை லட்சுமணன்  : கார்ட்டூன் சேனல்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ் இவற்றில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளை புத்தக வாசிப்பில் மீட்டெடுப்பது எப்படி?

படிப்பதற்கு கண்களுக்கு இட வல இயக்கம் (Eye Ball Movement) மிக முக்கியம். கவனம் 
கூர்மையாகி, இந்த இயக்கம் வேகமாகும்போது, படிப்பதும் விரைவாக இருக்கும். ஆனால், தொலைக்காட்சி பார்க்கவோ, கேம்ஸ் விளையாடவோ அந்த இயக்கம் தேவையில்லை. மேலும் இந்த இயக்கத்தையே அது மந்தமாக்கி குழந்தைகள் வேகமாகப் படிக்கும் திறனைக் குறைக்கின்றன. இதனால், கண்களின் இயக்கத்தைத் தூண்டுவதற்காகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இன்றைய நிலையில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைகளைக் கவனிக்க நேரம் குறைவு. இந்த நிலையில் குழந்தை சமர்த்தாய் வால் தனம் பண்ணாமல் இருந்தால் போதும் என்கிற பெற்றோரின் தப்பித்தல் மனப்பான்மையே குழந்தைகளை இத்தகைய நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருகின்றன. குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குதல் மிக முக்கியம். ஒரு புத்தகத்தைக் கொடுத்து ‘அப்பாவுக்கு (அல்லது) அம்மாவுக்குக் கண் வலிக்குது. படிச்சு சொல்லுடா செல்லம்... என்று வாய்விட்டுப் படிக்கச் சொல்லி கேட்கலாம். புத்தகத்தில் உள்ள ஒரு கதையைப் படித்துக் கூறினால் அதற்குப் பரிசு தரலாம். ஆனால், இதெல்லாம் அவர்களுக்காக நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியம்.

முத்துராமலிங்கம் சுப்பிரமணியன் : இன்றைய போட்டி நிறைந்த உலகில் குழந்தைகளை மார்க் வாங்கக் கூடியவர்களாக மட்டுமே பார்க்கும் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் தெரிந்தோ தெரியாமலோ அவர்களை ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுகிறது. மார்க் வாங்கினால் தான் பிழைக்க முடியும் என்பது போன்ற எண்ணங்களால் சிறு சிறு தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் தோல்வி பயத்தில் தற்கொலைகள் நிகழ்கின்றன. இவற்றை சரி செய்ய எந்தவகையான அணுகுமுறை நல்லது? எப்படி ஆரம்பிக்கலாம்?

பெற்றோர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறைகளே மாற்றப்பட வேண்டியவை. பெரியவர்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டு வந்தவர்கள். அதனால், குழந்தைகளைப் பெரியவர்களால் புரிந்து கொள்வது எளிது. ஆனால், குழந்தைகள் பெரியவர்களாக வாழ்ந்து பார்த்தவர்களில்லை. எனவே அவர்கள் பெரியவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓர் அதிகாரிதான். அவருக்குப் பதில் சொன்னால் போதும். ஆனால், ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைக்குத்தான் எத்தனை அதிகாரிகள். எத்தனை அச்சுறுத்தல்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று நீளும் ஆசிரியர் ஒவ்வொருவரும் குழந்தைகளின் அதிகாரிகளே. அவர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை முடிக்க வேண்டும். மதிப்பெண் எடுக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்தால் தண்டிப்பார்கள். வீட்டில் திட்டுவார்கள். இவையெல்லாம் அந்தப் பிஞ்சு இதயத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த அச்சங்களால் தூக்கம் இழந்து பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் மந்த நிலைக்குச் செல்லும் குழந்தைகளும் உண்டு.
அலுவலகம் செல்லும் தந்தைக்குக் கூட அலுவலகத்தோடு வேலைகள் முடிந்து விடுகின்றன. விட்டுக்கு வரும் குழந்தைக்கோ ஹோம் ஒர்க் என்ற பெயரில் மேலும் பணி தொடர்கிறது. பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு முன் அடித்தல், முட்டி போட வைத்தல் போன்ற தண்டனைகள் குழந்தைகளை இறுக்கமான மனநிலைக்குக் கொண்டு செல்கின்றன. பிடிவாதம், முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுகின்றன.  இவையே பின்னர் விரக்தி மனோநிலைக்குத் தள்ளி தற்கொலை வரை கொண்டு செல்கின்றன. நாமக்கல்லில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் என் நண்பர் கூறியுள்ளார்.  இதற்கெல்லாம் மூல காரணமாய் இருப்பது மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளைக் கசக்கிப் பிழிவதுதான். மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை செக்கு மாடுகள் ஆக்க வேண்டாம். முதுமைக் காலத்தில் இனிமை தரக் கூடியது பால்ய கால நினைவுகள்தான். குழந்தைகளின் பால்யத்தைப் பாலைவனமாக்கி விடாதீர்கள்.
மதிப்பெண் எடுப்பதுதான் கௌரவம் என்ற போலி பிம்பத்திலிருந்து பெற்றோர் வெளியில் வரவேண்டும். ஆல் பாஸ் பள்ளியில்தான் குழந்தையைச் சேர்ப்பேன் என்ற மனோபாவமும் மாற வேண்டும். பாடத்தைத் தவிர, அவர்களுக்கு ஆர்வமான விஷயங்களில் அவர்கள் நேரம் செலவிடவும் அனுமதிக்க வேண்டும். பில் கேட்ஸின் வார்த்தைகளைக் கேளுங்கள் ‘நான் என் பாடங்கள் சிலவற்றில் ஃபெயிலாகி விட்டேன். என் நண்பன் எல்லாப் பாடத்திலும் வெற்றி பெற்று விட்டான். நான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அவன் அதில் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறான். எனவே வாங்கும் மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒருவன் செல்லும் உயரத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஒருவன் நல்ல உயரம் செல்ல வேண்டுமென்றால் அவனுக்குப் பிடித்த விஷயங்களைக் கண்டுபிடித்து சிறு வயதிலிருந்தே அந்தத் துறையில் பயிற்சியளிக்க வேண்டும்.

ரோஸலின் : முன்பெல்லாம் பள்ளிகளில் நல ஒழுக்க கல்வி வகுப்பு இருக்கும். அப்பொழுது நல்ல நல்ல கதைகளை வாசிப்பார்கள். இப்பொழுது இது போல் நிகழ்வு குறைந்து விட்டதற்குக் காரணம், மார்க் மட்டும் வாங்கினால் போதும் என்று நினைக்கும் பெற்றோரா? / புத்தகத்தில் உள்ள பாடங்களை கற்று கொடுத்தால் போதும் என்று நினைக்கும் ஆசிரியர்களா? / மார்க் மட்டும் அதிகம் பெற்று கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கும் நிர்வாகமா?

இதில் முதல் காரணகர்த்தா பெற்றோர்தான். போட்டி நிறைந்த உலகில் தன் வாரிசு அதிக மதிப்பெண் எடுப்பது கௌரவம் என்கிற பெற்றோரின் பொய்யான நம்பிக்கையே ஆசிரியர்களையும், கல்வி நிறுவனங்களையும் இயக்குகின்றன. என் பள்ளி நாட்களில் நான் மிகவும் விரும்பிய வகுப்பு நீதி போதனை வகுப்புதான். அது அபாரமான அனுபவம். தற்போது, பாடச் சுமை அதிகமாக அதிகமாக அந்த வகுப்பையே எடுத்து விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

கார்ட்டூனிஸ்ட் முருகு : விருதுகள் பல பெற்றுள்ள இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் எண்ணம் உண்டா?

அந்த ஆசை இரண்டாண்டுகளுக்கு முன்பே வந்தது. நண்பர் ஒருவரிடம் கூறி, அவரது நண்பரிடம் அதை மொழிபெயர்க்கச் சொன்னேன். ஆனால், அவர் சரியாக மொழி பெயர்க்கவில்லை. எனவே நானே அதனை மொழி பெயர்க்க நினைத்திருக்கிறேன்.

ஆனந்தன் அமிர்தன் : அடுத்த புத்தகம் எப்ப எழுதப் போறீங்க? ஏதேனும் தடையென்றால் நாங்கள் என்ன மாதிரி உதவலாம்?

பூங்குழலி  : அடுத்த குழந்தைகளுக்கான பொக்கிஷம் எப்போ சார் எழுதி வெளியிடப் போறீங்க? 

குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகலாம்.. தலைப்பு கூட ஒரு மாதிரி யோசித்து விட்டேன். ‘காக்கா ஏன் கருப்பாச்சு..?’ (கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது). காக்கா ஏன் கருப்பாகியிருக்கும்னுதான் கொஞ்சம் விஞ்ஞானப்பூர்வமா யோசிச்சிக்கிட்டிருக்கேன். ஒண்ணும் தோண மாட்டேங்குது...


2 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்... பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_16.html?showComment=1410829864457#c3775928799328011888

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலம் உங்கள் பகுதிக்கு வந்தேன். பல தகவல்களை அள்ளிச் செல்லுகின்றேன். அருமையான பதில்களை விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்

    ReplyDelete